பழனி: தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் நடைமுறை கடந்த 5ஆம் தேதி தேதி முதல் தொடங்கியது.
சென்னை, திருமயிலைக் கோவில் என்னும் கபாலீஸ்வரர் கோவிலில் இதனைத் தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, விரைவில் அனைத்துக் கோவில்களிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அதன்படி காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தமிழ் வழிபாடு தொடங்கியது.
ஒவ்வொரு கோவிலிலும் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து அறிவிப்புப்பலகை வைக்கப்பட்டு அதில் எந்த அர்ச்சகர் இதனை செய்ய உள்ளார் என்பது குறித்த பெயர் மற்றும் செல்போன் எண் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
முருகப்பெருமானின் 3ஆம் படைவீடான பழனிக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் தினசரி ஆயிரக்கணக்கான அளவில் வந்து செல்கின்றனர். மேலும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் வருகின்றனர். ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் சற்று குறைந்துள்ளது.
பழனியில் இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. வார இறுதி நாட்களில் கோவில்கள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று காலை முதல் வழக்கம் போல் பழனி மலைக்கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாட்டுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் தமிழில் அர்ச்சனை செய்யும் நடைமுறை நேற்று தொடங்கியது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். நீண்ட நாட்களாக தமிழ்கடவுள் முருகனுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அது நடைமுறைக்கு வந்துள்ளது. இதே போல் பழனிகோவிலின் துணைக்கோவில்களான திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன், பெரியாவுடையார், மாரியம்மன், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யும் முறை நேற்று தொடங்கியது. ஒவ்வொரு கோவிலிலும் இது குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகரின் பெயரும் அதில் இடம்பெற்றிருந்தது.