சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் நேற்று அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருவது அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுகவினர் கூறியுள்ளனர்.
இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட வேண்டாம் என்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பழனிசாமியும், முன்னாள் துணை முதல்வர் ஓ.பி. பன்னீர்செல்வமும் கூட்டாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர். "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்களிலும், அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் ஒரு சிலரின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துவதாக வரும் செய்திகள், மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்தாமல் திமுக அரசு, அதிமுகவினரைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறது என்ற ஐயப்பாடும் வருத்தமும் மனதில் எழுகின்றன," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், "துடிப்பான கழகச் செயல்வீரர் வேலுமணி மீது பொய்க் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு சோதனை மேற்கொண்டுள்ளது கண்டிக்கதக்கது என்று கருதுகிறோம்.
"அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது.
"ஆதாரம் ஏதுமின்றி ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "திமுக அரசு காவல்துறையினரை ஏவி விட்டு அதிமுகவை களங்கப்படுத்த முயற்சி செய்கிறது. எங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தவறு என நீதிமன்றத்தில் மெய்ப்பிப்போம்," என்று கூறியுள்ளார்.

