சென்னை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த அருண் பரத், வயது 24 போலிஸ் விசாரணையின்போது மரணமடைந்தார்.
இவரது குடும்பத்துக்கு இழப் பீடாக ரூ. 5 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் இந்தத் தொகையை போலிஸ்காரரான ஸ்ரீகுமாரிடம் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டில் மிரட்டல் புகார் குறித்து விசாரிப்பதற்காக அருண் பரத்தை
அப்போதைய துணைக் காவல் ஆய்வாளர் ஸ்ரீகுமார் சாத்தான் குளம் போலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
போலிஸ் நிலையத்துக்குச் சென்றதும் வாகனத்தில் இருந்து இறங்கிய அருண்பரத் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அருண் பரத் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஸ்ரீகுமார் தாக்கியதால்தான் அருண் பரத் இறந்து போனதாகக் கூறி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருண் பரத்தின் தந்தை டேவிட் இன்பராஜ், மனித உரிமை ஆர்வலர்கள் ராமச்சந்திரன், ஹென்றி டிபேன் ஆகியோர் மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரை. ஜெயச்சந்திரன், "சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்துப் பார்க்கும்போது துணை ஆய்வாளர் ஸ்ரீகுமார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரிகிறது. அவருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை மூன்று மாதங்களில் முடித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க டி.ஜி.பி.க்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும்," என்றார்.
மேலும் "அருண் பரத்தின் தந்தைக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடாக ஒரு மாதத்தில் வழங்க வேண்டும். இந்தத் தொகையை காவலர் ஸ்ரீகுமாரிடம் இருந்து தமிழக அரசு வசூலித்துக்கொள்ளலாம்," என்று நீதிபதி கூறியுள்ளார்.

