சென்னை: தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கி அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சட்டம் இயற்றப் பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நபர்கள், அமைப்புகள் என்று 25 பேர் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தனர். அதேபோல, இந்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் சார்பில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இந்த வழக்குகளுக்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஏற்ெகனவே உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு பிற் படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் செயலாளர் ஏ.எம்.ஆண்டியப்பன் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
"தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என தெரிவித்ததன் அடிப்படையி லேயே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
"சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முறையே 7 மற்றும் 2.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க ஆணையம் பரிந்துரைத்தது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983ஆம் ஆண்டு நடத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் வன்னியர்கள் 13.01 விழுக்காடு உள்ளனர்.
அந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாக மனு தாரர்கள் குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது. மற்ற சாதியினர் இந்த சட்டத்தின் மூலம் பாதிக்கப்படுவர் என மனுதாரர்கள் கூறுவது வெறும் கற்பனையே என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது இந்த வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி ஆதிகேசவலு விலகுவதாக கூறினார்.
இதையடுத்து வேறு நீதிபதியுடன் இந்த வழக்குகளை விசாரிப்பதாகக் கூறிய தலைமை நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.