செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a01c754b-2030-4c7c-a5fe-9d0dcf6bdf07
-
Google News Preferred Icon

ஏழுமலையான் கோயிலில்

பி.வி. சிந்து, சுவாமி தரிசனம்

திருமலை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சிந்துவுடன் அவரது தாய் விஜயா, தந்தை ரமணா ஆகியோர் வந்திருந்தனர். கோயிலுக்கு ெவளியே செய்தியாளர்களிடம் பேசிய பி.வி.சிந்து, "மாநில அரசின் ஆதரவுடன் இளைஞர்களுக்காக விசாகப்பட்டினத்தில் ஒரு பயிற்சி பள்ளியை விரைவில் தொடங்கவுள்ளேன். பல இளைஞர்கள் சரியான ஊக்கம் இல்லாததால் விளையாட்டுகளில் பின்தங்கி உள்ளனர்," என்று குறிப்பிட்டார்.

சாதனை; தங்க இருப்பு 700 டன்

மும்பை: இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியின் இருப்பில் உள்ள தங்கம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தற்போது இருப்பில் உள்ள தங்கம் சாதனை அளவாக 700 டன்னை எட்டியுள்ளது.

அண்மைக் காலமாகவே ரிசர்வ் வங்கி அதிகளவிலான தங்கத்தை வாங்கி வருகிறது. நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மட்டுமே 29 டன் தங்கத்தை வாங்கி இருக்கிறது. இதையடுத்து தங்கத்தின் இருப்பு 700 டன்னை தாண்டி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரிசர்வ் வங்கியின் தங்கத்தின் இருப்பு 27 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதையடுத்து உலகளவில் அதிக தங்கம் இருப்பில் வைத்துள்ள 10 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

விபத்தில் ஆறு பேர் பலி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை போளூர் அருகே மாருதி சுசுகி காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று மாதக் குழந்தை உள்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.