புதுடெல்லி: இந்திய எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி ெதாடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இரு அவைகளின் நடவடிக்கைகள் ஏறக்குறைய 80 விழுக்காடு பாதிக்கப்பட்டன.
பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் ஓரணியில் திரண்டு போராடினர். இதனால் ஆளும் பாரதிய ஜனதா கட்சி திணறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இதைப்புரிந்து கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்க்கட்சிகளை ஓரணியில் தக்க வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி யின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டடதால் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மேலும் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி ஓரணிக்குள் கொண்டு வரும் முயற்சிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா தொடங்கியுள்ளார்.
காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் தவிர பாரதிய ஜனதா அல்லாத மற்ற மாநில முதல்வர்களை தங்களுக்கு ஆதரவாக கொண்டு வரும் முயற்சிகளை சோனியா எடுத்து வருகிறார். இதற்காக வரும் 20ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களிடம் சோனியா பேச திட்டமிட்டு உள்ளார்.
மெய்நிகர் வழியாக அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் அன்று சோனியா தொடர்பு கொள்வார் எனத் தெரிகிறது.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வைக்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்ட உணர்வை பாரதிய ஜனதாவுக்கு எதிராக திருப்ப சோனியா நாடு முழுவதும் உள்ள முக்கிய தலைவர்களை ஒன்று திரட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

