சென்னை: தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கிராமப்புறங்களில் வீடு இல்லாத 8.03 லட்சம் பேருக்கு ஐந்து ஆண்டு களில் வீடுகள் கட்டித் தரப்படும் என்று வரவு செலவுத் திட்ட அறிவிப்பில் கூறியுள்ளார்.
அந்த வகையில் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.3,548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
"கலைஞர் பெயரில் நமக்கு நாமே திட்டம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். அதேபோல் ஆயிரம் கோடி ரூபாயில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாளச் சாக்கடைகள் அமைக்கப் படும். அடுத்த 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும்.
"தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடி நிதி ஒதுக்கப்படும். சிங்கார சென்னை 2.0 திட்டம் தொடங்கப்படும். 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கு ரூ.2,350 கோடி நிதி ஒதுக்கப்படும்.சென்னையில் மூன்று இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்ட ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
"பள்ளிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ரூ.32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு, மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் பகுதிகளில் புதிய பெருநகர வளர்ச்சிக்குழுமங்கள் ஏற்படுத்தப்படும்.
"413 கல்வி ஒன்றியங்களுக்கு தலா 40 தொடுதிரை கையடக்க கணினிகள் ரூ.13.22 கோடியில் வழங்கப்படும். உயர் கல்வித் துறைக்கு ரூ.5,369.09 கோடி நிதி ஒதுக்கப்படும்.
"நடப்பாண்டில் தமிழகத்தில் புதிதாக 10 கலை, அறிவியல் கல்லூரிகள் தொடக்கப்படும். 25 கலை, அறிவியல் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ்நாடு ஆளில்லா விமானக் கழகம் உருவாக்கப்படும்.
"மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு மொத்தம் ரூ.18,933.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிக அளவிலான முதலீடுகளை ஊக்குவிக்க புலம்பெயர் தமிழர்களுடனான உறவு வலுப்படுத்தப்படும். சுற்றுலாத் துறைக்கு ரூ.187.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
புதிய வரவுசெலவுத் திட்டம் இந்த நிதி ஆண்டின் எஞ்சிய காலத்திற்குப் பொருந்தும் என்று குறிப்பிட்ட அவர், நடப்பு நிதியாண்டின் வருவாய் ரூ.2,60,409.26 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் செலவினம் ரூ.319,101.26 கோடியாக இருக்கும் என்றும் 2021-2022ஆம் ஆண்டு நிதிப்பற்றாக்குறை ரூ.58,692 கோடியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

