தமிழகத்தின் முதல் வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல்

3 mins read
5e9ed711-8f9c-4711-b748-086659c4f4d5
-

சென்னை: தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக நேற்று வேளாண்துறைக்கு என தனி நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கையை தாக்கல் செய்து, அதன் முக்கிய அம்சங்களை விவரித்தார்.

முன்னதாக புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடுபவர்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையை காணிக்கையாக்குவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், வேளாண் மக்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் 'வேளாண்மை-உழவர் நலத்துறை' என பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வணிகர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகளிடமும் 18 மாவட்ட விவசாயிகளிடமும் கருத்துகளைக் கேட்டறிந்து, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, அதன் பின்னரே வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

நெல் பாதுகாப்பு இயக்கம்

நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மைக்கான ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், இயற்கை வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை வலுப்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கப்படும் என்றார்.

மண் வளத்தை பாதுகாத்து, ஆரோக்கியமான உணவை மக்களுக்கு வழங்க இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ரூ.33.03 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டி, பாதுகாத்து, விதை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் வகையில், நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்படும் என்பதும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

வேளாண் அருங்காட்சியகம், உபகரணங்கள் தொகுப்பு

வேளாண்மையின் மகத்துவத்தை இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில், சென்னையில் மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் மண்வெட்டி, களைக்கொத்து, இரும்புச்சட்டி, கடப்பாரை, கதிர் அரிவாள் அடங்கிய 'வேளாண் உபகரணங்கள் தொகுப்பு' வழங்குவதற்காக ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கூட்டுறவுச் சங்கங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் கொள்முதல் செய்து பொது விநியோக முறையிலும், மதிய உணவுத் திட்டத்திலும் புரதச்சத்து மிகுந்த பயறு வகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் துவரை, உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளை 61,000 மெட்ரிக் டன் அளவிற்குக் கொள்முதல் செய்ய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

பனை மரம் வெட்ட ஆட்சியர் அனுமதி தேவை

பனை மரங்களை வேரோடு வெட்டி விற்கவும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனைமரங்களை வெட்டவும் நேரும் நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறவேண்டியது கட்டாயமாக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

பனை மரங்களைப் பாதுகாப்பதுடன் கூடுதல் மரங்களை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தமிழகத்தில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளையும் ஒரு லட்சம் பனங்கன்றுகளையும் முழு மானியத் தொகையுடன் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், ஏரிக் கரைகளிலும் சாலையோரங்களிலும் பனைமரங்களை வளர்ப்பதற்கு மீண்டும் முயற்சிகள் எடுக்கப்படும் என்றார் அவர்.

இன்று மக்கள் அதிகம் விரும்பும் பொருட்களாக பனங்கற்கண்டு, பதநீர், கருப்பட்டி போன்றவை விளங்குகின்றன என்றும், அவற்றைக் கலப்படமில்லாமல் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தால் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பனை மேம்பாட்டு இயக்கத்துக்கு என 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறினார்.

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2,750ல் இருந்து ரூ.2,900ஆக உயரும், பயிர்க்காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்த ரூ.2,327 கோடி ஒதுக்கீடு, சூரிய சக்தியால் இயங்கும் ஐந்தாயிரம் பம்பு செட்டுகள் 70% மானியத்தில் நடப்பு ஆண்டில் நிறுவப்படும் என்பன உள்ளிட்ட மேலும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

'இந்த அறிக்கை டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு காணிக்கை'