சென்னை: தமிழகத்தில் பெட்ரோல் விலை ஓரளவு குறைந்தது மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 28 நாள்களுக்குப் பிறகு பெட்ரோல் விலை மூன்று ரூபாய் குறைந்தது.
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது.
இதையடுத்து பெட்ரோல் விலை நூறு ரூபாய்க்கும் கீழ் வந்தது.
திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அப்போது வரி குறைப்பு குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
இதனால் ரூ.102க்கும் மேல் விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.99.47 ஆக குறைந்தது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட அன்றைய தினமே விலை குறைந்துள்ளது என்று வாகனமோட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அதே சமயம் டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லை. தமிழகத்தில் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

