செய்திக்கொத்து

2 mins read
7d9f3a39-5ab4-4146-8523-6b43d6910314
-

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பில் மேலும் ஒருவரை சிபிஐ கைது செய்துள்ளது. இது வரை ஒன்பது பேர் கைதாகி உள்ளனர். இப்போது கைதான பொள்ளாச்சியை அடுத்த சூரம்பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் (29 வயது) ஏற்கெனவே இவ்வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு கைதான சதீஷின் நண்பர் ஆவார்.

தேர்தல்: விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை: எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல் தேமுதிகவுக்கு முக்கியமான தேர்தலாக அமையும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். வெற்றி வாய்ப்பு இருக்கும் அனைத்து இடங்களிலும் எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல் வேட்பாளர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கார், லாரி மோதல்: ஏழு பேர் பலி

வேலூர்: லாரி மீது கார் மோதிய விபத்தில் மூன்று வயது குழந்தை உட்பட ஏழு பேர் பலியாகினர். வேலூரைச் சேர்ந்த மூர்த்தி (55 வயது) நேற்று முன்தினம் தமது குடும்பத்தாருடன் திருவண்ணாமலையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் சென்றார். மகன் சசிகுமார் காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது, திடீரென அதன் டயர் வெடித்தது. இதனால் எதிரே நெல்மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மீது கார் பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் மூர்த்தி உள்ளிட்ட ஏழு பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய வாகனத்தில் 11 பேர் பயணம் செய்ததால் அழுத்தம் காரணமாக காரின் டயர் வெடித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மதுரை ஆதீனம் காலமானார்

மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. மதுரை ஆதீன மடத்தின் 292வது ஆதீனமாக இருந்து வந்தவர், மதுரை ஆதீனம் சில நாள்களாக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.