சென்னை: கைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் சிக்கிய இளையரை, மீண்டும் அதே குற்றத்தைச் செய்யுமாறு தூண்டிய சிறைக்காவலர் கைதானார்.
சென்னையைச் சேர்ந்த சிபி என்ற இளையர் கடந்த ஆண்டு கைபேசி திருடிய வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறைக்காவலர் ரமேஷ் என்பவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. சிபியிடன் நன்றாகப் பழகிய சிறைக்காவலர் ரமேஷ், சிபி விடுதலை அடைந்து வெளியே சென்றதும், மீண்டும் கைபேசிகளை திருடி தன்னிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
மேலும், தனக்கு தெரிந்தவர்களிடம் திருட்டுக் கைபேசிகளை விற்று பணமாக்க முடியும் என்றும் அவ்வாறு கிடைக்கும் தொகையை சரிபாதியாகப் பிரித்துக் கொள்ளலாம் என்றும் ரமேஷ் கூற, அதற்கு சிபி ஒப்புக் கொண்டடார்.
இதையடுத்து சிறைக்குள் சிபிக்குப் பல்வேறு சலுகைகளும் வசதிகளும் ரமேஷ் மூலம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. சிபிக்கு மதுபுட்டிகள்கூட ரமேஷ் ஏற்பாட்டில் கிடைத்ததாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் விடுதலையானார் சிபி. அதன் பின்னர் 25 கைபேசிகளை திருடிய அவர், அவற்றை மொத்தமாக சிறைக்காவலர் ரமேஷிடம் கொடுத்துள்ளார்.
எனினும் போலிசார் மேற்கொண்ட விசாரணையின்போது இவர் சிக்கியதை அடுத்து, ரமேஷுக்கும் இந்தத் திருட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
சிபியைப் போல் மேலும் சில கைதிகளை ரமேஷ் மூளைச் சலவை செய்து கைபேசி திருடும்படி தூண்டி விட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

