சென்னை: திருமண தகவல் மையம் மூலம் ஏராளமான பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து பண மோசடியிலும் ஈடுபட்ட இளையர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவைச் சேர்ந்த 25 வயதான சூர்யா, தம்மை பொறியியல் பட்டதாரி என்று குறிப்பிட்டு, திருமண தகவல் மையத்தில் பெயரைப் பதிவு செய்துள்ளார்.
இதே போல் தகவல்களைப் பதிவு செய்துள்ள இளம் பெண்களைத் தொடர்புகொண்டு பேசுவது அவரது வழக்கம். பின்னர் அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி, திருமணம் செய்து பணம் பறித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த 22 வயதான வைதேகி என்ற பெண்ணை தனது வலையில் விழவைத்த சூர்யா, அவரை ஏமாற்றி ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
மேலும், அதை காணொளியாகப் பதிவு செய்து வைதேகியை மிரட்டி உள்ளார். அப்பெண்ணின் பெற்றோரை ஏமாற்றி ஏழு லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்து தலைமறைவான அவர் மீது வைதேகி புகார் அளிக்க, சூர்யா போலிசில் சிக்க நேர்ந்தது.
கோவையில் வேறொரு பெண்ணுடன் தங்கியிருந்த போது போலிசார் அவரை கண்டுபிடித்து கைது செய்தனர்.
விசாரணையின்போது, அவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களை தமது வலையில் சிக்க வைத்து லட்சக்கணக்கில் பணமும் நகைகளும் பறித்தது தெரியவந்துள்ளது.

