நீலகிரி: தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளாவில் இருந்து வரும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில எல்லையில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும் அதன் பிறகே பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மைய சில தினங்களாக கேரளாவில் கொரோனா தொற்றுப் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கர்நாடகாவைப் பொறுத்தவரை பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதால் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், அண்டை மாநிலத்தில் இருந்து தினமும் தமிழகம் வரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களால் மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. குறிப்பாக, கேரளா, கர்நாடகாவின் எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
இதையடுத்து அப்பகுதியில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது. இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே நீலகிரியில் நுழைய அனுமதி அளிக்கப்படுகிறது.
இதேபோல், தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள கக்கநல்லா சோதனைச்சாவடி, தமிழக-கேரள எல்லையில் உள்ள நாடுகாணி உட்பட மாநில எல்லையில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் சான்றிதழ் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

