பொள்ளாச்சி பாலியல் வழக்கு: மேலும் இருவருக்கு வலை விரிக்கும் சிபிஐ
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட இருப்பதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.
இளம் பெண்கள் பலரை மிரட்டியும் கடத்திச் சென்றும் பாலியல் வன்கொடுமை புரிந்தது தொடர்பாக பொள்ளாச்சி பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதையடுத்து, மேலும் மூன்று பேர் சிக்கினர்.
இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், ஒன்பதாவது குற்றவாளியாக அருண்குமார் என்பவர் இரு தினங்களுக்கு முன் கைதானார்.
இந்நிலையில், மேலும் இருவரை கைது செய்ய இருப்பதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.
ஒரே நாளில் மேலும் 1,916 பேருக்கு தொற்று பாதிப்பு; 34 பேர் பலி
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் மேலும் 34 பேர் உயிரிழந்துவிட்டனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 34,496ஆக அதிகரித்துள்ளது. அதிக பட்சமாக கோவையில் 223, ஈரோட்டில் 185, சென்னையில் 219, செங்கல்பட்டில் 116, தஞ்சையில் 112, சேலத்தில் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என்றும் இதர மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானோர் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட ஏழு இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை
சென்னை: திருவனந்தபுரத்தில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் தொடர்பாக சென்னை, திருவள்ளூர், கேரளாவில் ஏழு இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். திருவனந்தபுரத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.300 கோடியாகும். மேலும், 'ஏகே 47' ரக துப்பாக்கி, குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஏற்கெனவே ஏழு பேர் கைதான நிலையில், சென்னையில் மேலும் ஒருவர் கைதானார். சற்குணம் என்ற அவர், இலங்கையைச் சேர்ந்தவர். அவர் மீது கேரளாவில் ஏற்கெனவே வழக்கு உள்ளது.
கொரோனா அச்சம்: தந்தையை சாலையில் விட்டுச்சென்ற மகன்
மதுரை: உடல்நலம் குன்றியுள்ள 80 வயது முதியவரான கருப்பத்தேவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கருதிய அவரது மகன், சாலையில் அவரை ஆதரவற்ற நிலை யில் விட்டுச்சென்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வேலை பார்த்து சம்பாதித்து வந்த கருப்பத்தேவர் உடல் நலம் குன்றியதால் மகன் வீட்டில் தங்கியிருந்தார். அண்மையில் அவரை ஆட்டோவில் ஏற்றிச்சென்ற அவரது மகன், நகரின் ஒரு பகுதியில் உள்ள பாலத்தின் ஓரம் விட்டுச் சென்றார். உடலில் ஆடைகள் இன்றி, ஈ, எறும்பு மொய்த்தபடி சாலையில் கிடந்த முதியவரைப் பற்றி தகவல் அறிந்த மதுரை மாவட்ட ஆட்சியர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

