'சமூக நீதி கொண்ட மாநிலமாக தமிழகத்தை உயர்த்த வேண்டும்'
சென்னை: தமிழ்ச் சமூகமானது சிந்தனையால், பண்பாட்டால், நாகரிகத்தால், பழக்கவழக்கத்தால் உயர்வடைய வேண்டும் என்றும் ஏற்றத்தாழ்வு அற்ற ஒருமனித உரிமைச் சமூகமாக மாறவேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், மேம்பட்ட தமிழ்நாட்டை உருவாக்க நினைக்கும் தமிழக அரசுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நேற்றுடன் சரியாக 101 நாள் முடிவடைந்தது. இந்நிலையில், முதன்முறையாக சென்னை கோட்டையில் கொடியேற்றி வைத்து அவர், தமது சுதந்திர தின உரையை நிகழ்த்தினார்.
அப்போது, அனைவருக்கும் சமமான உரிமைகளை அளிக்கும் சமூக நீதி கொண்ட மாநிலமாக தமிழகத்தை உயர்த்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கான விதை தமிழகத்தில்தான் போடப்பட்டது என்றும் பூலித்தேவன் தொடங்கி பெரியார் வரை பல தலைவர்கள் சுதந்திரத்திற்காக போராடினார்கள் என்றும் முதல்வர் நினைவுகூர்ந்தார்.
"தமிழ்நாட்டுத் தியாகிகளின் மூச்சுக் காற்று மூலமே இந்தியாவின் சுதந்திரம் கட்டி எழுப்பப்பட்டது. அவர்களின் போராட்டம்தான் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு தூணாக இருந்தது.
"இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு குறித்த ஆவணம் உருவாக்கப்படும். முறையான ஆவணத்தை இதற்காக உருவாக்கி தமிழக அரசு வெளியிடும். விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியம் 17 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றுவதில் திமுக முன்னிலை வகித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், வ.உ. சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாள் அரசு சார்பில் எழுச்சியோடு கொண்டாடப்படும் என்றார்.
"தமிழக முதல்வராக நான் பதவி ஏற்று 101 நாட்கள் ஆகிவிட்டது. அரசின் நிதிநிலை அறிக்கை, வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. மக்களைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
"ஆட்சிப் பொறுப்புக்கு வந்த முதல் நாளில் இருந்தே கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
சாதி, மதம், இனம் குறித்த சவால்களை எதிர்கொண்டு இருக்கும் இந்தியாவிற்கு 'காந்தி' என்ற ஆயுதம்தான் ஒரே வழி என்று குறிப்பிட்ட அவர், காந்தியின் பண்புகளை இளையர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
காந்தி தமிழ் மொழியின் மீது மிகுந்த விருப்பம் கொண்டு இருந்தார் என்றும் அவரது மேலாடை துறப்பிற்கு தமிழகம்தான் காரணமாக இருந்தது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டார்.

