சென்னை: கேரளாவில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று காலை சென்னையில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்தது.
அண்மையில் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக மீரா மிதுன் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தம்மைக் கைது செய்ய வாய்ப்பு இருப்பதை அறிந்த மீரா மிதுன், கேரளா புறப்பட்டுச் சென்றார். அங்கு நட்சத்திர தங்கும் விடுதியில் அவர் தங்கியிருப்பதை அறிந்த போலிசார், நேரடியாக அங்கு சென்று அவரைக் கைது செய்தனர்.
இதன் பின்னர் மீரா மிதுன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக, கைது நடவடிக்கையின்போது போலிசாரிடம் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அதை காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
"பெண்கள் என்றால் இப்படித்தான் கைது செய்து கொடுமைப்படுத்த வேண்டுமா? பிரதமர், முதல்வர் இருவரும் இதைப் பார்க்கட்டும். தமிழக போலிசார் என்னைக் கொடுமைப்படுத்துகிறார்கள்," என்று மீரா கண்ணீர் சிந்தியபடி உரக்கப் பேசுவது அந்தக் காணொளியில் பதிவாகி உள்ளது.
சென்னையில் நடத்தப்பட்ட விசாரணையின்போது, பட்டியலினத்தவர்கள் குறித்து அவர் இழிவாகப் பேசியது தொடர்பான காணொளிப்பதிவை ஆதாரமாக வைத்து விளக்கம் கேட்கப்பட்டதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

