சென்னை: தேர்தல் சமயத்தில் அள்ளி வீசிய வாக்குறுதிகளை முறைப்படி நிைறவேற்றாமல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள திமுக மக்களை வஞ்சித்து வருவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், "கொடுத்த வாக்குறுதியில் இருந்து என்றைக்கும் பின்வாங்கமாட்டோம். சொன்னதை சொன்னபடி நிச்சயம் நிறைவேற்று வோம்," என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பொது, வேளாண் துறைக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நேற்று காலை தொடங்கியது. இவ்விவாதம் வரும் 19ஆம்தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், விவாதத்தின் போது, எதிர்க்கட்சி உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார், "திமுக ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் ஆகியும் இன்னும் ஏன் விவசாயக் கடன்கள், நகைக் கடன்கள் ரத்து செய்யப்படவில்லை? தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குவதற்காகவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா?" என கேள்வி எழுப்பினார்.
"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், எந்த ஓர் அறிக்கை யையும் தயார் செய்யும்போது, தாய்ப் பூனை குட்டிப் பூனையை வாயில் கவ்விச் செல்வது போல் தாய்ப் பாசத்தோடு இருக்கவேண்டும்.
"ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட அறிக்கை பூனை எலியைக் கவ்விச் செல்வது போல் உள்ளது," என விமர்சித்து உள்ளார்.
உதயகுமாருக்குப் பதிலளித்த முதல்வர், "கடந்த 2016 தேர்தலில் கூறப்பட்ட அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா என்று கேட்டதுடன், இலவச கைபேசி, பொது இடங்களில் வைஃபை வசதி, மோனோ ரயில் திட்டம், பட்டு ஜவுளிப் பூங்கா உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை," என பட்டியலிட்டார்.
கடந்த ஆட்சியில் அவசரகதியில் தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க் கடன், நகைக்கடனில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் இவை சரிசெய்யப்பட்டு, நகைக்கடன்களும் பயிர்க் கடன்களும் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.
"திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் சொன்னதையும் செய்து வருகிறது, அதேபோல் சொல்லாததையும் செய்து வருகிறது. 14 வகை மளிகைப் பொருள்கள் தொகுப்பு தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப் படாதது. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்," என்றார்.
இதனிடையே, விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, நிலமில்லாத எத்தனை பேருக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது என கேட்டார்.
அதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இரண்டரை லட்சம் ஏக்கர் நிலங்களை ஏழை எளிய மக்களுக்கு பிரித்துக் கொடுத்தது திமுக அரசுதான் என சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையே, கடந்த ஆட்சிக் காலத்தில் தகுதியான லட்சக் கணக்கான நபர்களுக்கு முறையாக முதியோர் உதவித்தொகை வழங்கப்படவில்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் குற்றம்சாட்டை முன்வைத்தார்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்கள் அனைத்தும் வெற்று வாக்குறுதிகள் அல்ல. அவை நிச்சயம் நிறைவேற்றப்படும். எங்கள் நிதிநிலைமையைக் காரணம் காட்டி தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து திமுக அரசு ஒருபோதும் பின்வாங்காது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்

