செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
1f99c02e-d588-49a9-a097-a46ecb4be938
-

200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு

களக்காடு: நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரம் கிராமத்தில் ஒரே வாரத்தில் ஏறக்குறைய 200 பேர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அசுத்தமான தண்ணீர் காரணமாகவே மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரு வாரங்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் தரிசனம்

ராமேஸ்வரம்: கொரோனா பரவல் காரணமாக புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை ஆகஸ்ட் 1ஆம் தேதி மூடப்பட்டது. ஆடி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் பங்கேற்பதற்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் இந்நடவடிக்கையை எடுத்தது. இந்நிலையில், 15 நாட்களுக்குப் பிறகு நேற்று முதல் கோயில் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அக்னி தீர்த்த கடற்கரையில் முகக்கவசம் அணியாமல் தர்ப்பணம் கொடுத்தவர்களிடம் போலிசார் அபராதமும் வசூலித்தனர்.

ஆழ்கடலில் தேசியக் கொடியைப் பறக்கவிட்டு சாதனை

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை, நீலாங்கரையைச் சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த், 40, (படம்) சுவாச உபகரணங்கள் அணியாமல் ஆழ்கடலில் தேசியக் கொடியைப் பறக்கவிட்டு சாதனை படைத்தார். நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு நீலாங்கரை கடற்கரையில் இருந்து படகு மூலம் கடலுக்குள் சென்று, கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் சென்று தேசியக் கொடியைப் பறக்கவிட்டார். ஆழ்கடலுக்குள் செல்லும்போது சுவாச உபகரணங்கள் அணியாமல் 2 நிமிடம் மூச்சை அடக்கி, தேசியக் கொடியைப் பறக்கவிட்டு சாதனை படைத்தார். அதன்பிறகு 10 மணிக்கு புதுச்சேரி கடலில் இதேபோல் 60 அடி ஆழத்தில் தேசிய கொடியைப் பறக்கவிட்டார். அப்போது சுவாச உபகரணங்கள் அணிந்து சென்றார்.

இதுகுறித்து அரவிந்த் கூறுகையில், "நான் கடந்த 16 ஆண்டுகளாக ஆழ்கடல் பயற்சி அளித்து வருகிறேன். கடல் வளத்தைப் பாதுகாக்க ஆழ்கடலில் உடற்பயிற்சி, யோகா, சைக்கிள் ஓட்டுவது, குப்பை அகற்றுவது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறேன். ஒவ்வொரு முறையும் கடலோர பாதுகாப்புத் துறையின் அனுமதியைப் பெற்ற பிறகே ஆழ்கடலில் இறங்குவேன்," என்று கூறினார்.

முதியவரை அறைந்த காவலர் இடைநீக்கம்

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகில் உள்ள ரெத்தினக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராதாகிருஷ்ணன், 69. இவருக்கும் இவரது உறவினர் ஆறுமுகத்திற்கும் இடையே சொத்துப் பிரச்சினை இருந்து வர, இதுகுறித்து ஆறுமுகம் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வந்த ராதாகிருஷ்ணனை தலைமைக் காவலர் முருகன் 'பளார்' என அறைந்துள்ளார். நாகரிகம் இன்றி திட்டி, வழக்கு போட்டு உள்ளே தள்ளிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இந்தச் சம்பவங்கள் காெணாளியாக வெளிவந்ததை அடுத்து முருகன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.