சிவகங்கை: ஒரே குழியில் நான்கு செந்நிறப் பானைகள் கண்டறியப்பட்டது கீழடியில் அகழாய்வில் ஈடுபட்டிருக்கும் தொல்லியல் ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
கீழடியில் இப்போது ஏழாம் கட்ட அகழாய்வுப்பணி நடைபெற்று வருகிறது. இதுவரை ஏராளமான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பானை, உறைகிணறுகள், வரி வடிவ பானை ஓடுகள், சுடுமண் பகடை, கல் உழவு கருவி, வெள்ளி முத்திரை நாணயம் உள்ளிட்டவைகள் பண்டைய காலத் தமிழர்களின் சிறப்பை பறைசாற்றுவதாக உள்ளன.
சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருள்கள் தொடர்ந்து கிடைத்து வருவதால், அகழாய்வுப் பணியை உலகத் தமிழர்களும் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், கீழடியில் ஒரே குழியில் செந்நிறத்திலான நான்கு சிறிய பானைகள் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டன. மேலும், கிண்ணம் போன்ற கறுப்பு, சிவப்பு நிறப் பானையும் கிடைத்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

