மதுரை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநரும் இந்திய அதிபரும் எடுக்கும் முடிவுகளுக்கு காத்திருப்பதாக தமிழக அரசு, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தெரிவித்துள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் தங்களை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதே கோரிக்கையுடன் வேலூர் சிறையில் உள்ள நளினி ஏற்கெனவே தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய அரசுத் தரப்பு, அதேபோல் இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
மேலும், ஆளுநர், அதிபரின் முடிவுகளுக்காக காத்திருப்பதையும் அரசுத் தரப்பு சுட்டிக்காட்டியது.
இதையடுத்து, ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றம் எத்தகைய முடிவையும் எடுக்க இயலாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. பின்னர் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

