செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
7c35caf6-fccd-4810-b65a-49fe62994b08
-

மு.க.அழகிரி பாஜகவில் இணைவார்: சி.பி.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

நாமக்கல்: மிக விரைவில் மு.க.அழகிரி பாஜகவில் இணைகின்ற நாளை நாம் உருவாக்கிக் காட்டுவோம்

என்று நாமக்கல்லில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியது அக்கட்சியிலும் திமுக வட்டாரங்களிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. "அண்மையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய பலர் நம்மைத் தேடி வருகிறார்கள். இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு இடங்களைப் பெற்றுள்ளோம். அடுத்த முறை 140 இடங்கள் பெறும் வரை ஓயாமல் உழைக்க வேண்டும்," என்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மூன்று பேரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில், ஓரிடத்துக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலம் கொண்டுள்ள திமுக சார்பில் களமிறக்கப்படும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜானின் பதவிக்காலம் 2025ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அவர் காலமானார். இதையடுத்து காலி இடம் ஏற்பட்டுள்ளது. அதை நிரப்ப தற்போது தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் விதிமுறைப்படி, 118 எம்எல்ஏக்கள் வாக்களித்தால் ஒரு வேட்பாளர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுவார். திமுக வசம் 133 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

கே.சி.வீரமணி மீது சொத்துக்குவிப்பு புகார் அளித்த அறப்போர் இயக்கம்

சென்னை: முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியும் அவரது குடும்பத்தாரும் வருமானத்துக்கு மீறி 76.65 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைச் சேர்த்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம் சார்பில் இந்தப் புகாருக்குரிய ஆதாரங்களும் அளிக்கப்பட்டிருப்பதாக அதன் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். வீரமணியின் பெயரில் உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு மட்டுமே கடந்த பத்து ஆண்டுகளில் 43 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்து உள்ளதாக அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிவசங்கர் பாபா பிணை மனு தள்ளுபடி

சென்னை: பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிவசங்கா் பாபா பிணை கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். அவர் மீது மூன்று வழக்குகள் பதிவாகி உள்ள நிலையில், இரு வழக்குகளில் மட்டும் பிணை வழங்கக் கோரி அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு பிணை வழங்க அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வருமான வரித்துறைக்கு எதிரான வழக்கு: நடிகர் சூர்யா மனு தள்ளுபடி

சென்னை: வருமான வரி செலுத்துவது தொடர்பாக நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டில் சூர்யா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதன் பின்னர் அவர் அச்சமயம் செலுத்த வேண்டிய வருமான வரியைக் கணக்கிட்டு 2011ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தனர். இதை எதிர்த்து வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் சூர்யா முறையீடு செய்தார். எனினும், தீர்ப்பு அவருக்குச் சாதகமாக அமையவில்லை. தமது முறையீடு தொடர்பான தீர்ப்பை வழங்க வருமான வரி தீர்ப்பாயம் மூன்று ஆண்டுகள் எடுத்துக்கொண்டதாகவும் அந்த காலகட்டத்துக்கு வருமான வரி சட்டப்படி, தாம் செலுத்த வேண்டிய வரிக்கு மாதம் ஒரு விழுக்காடு வட்டி வசூலிப்பதில் இருந்து தமக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் எனக் கோரி சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். மனுவை விசாரித்த நீதிமன்றம், வருமான வரித்துறையின் வாதத்தை ஏற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.