சென்னை: கொவிட்-19 காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களாக பள்ளிக்கூடங்கள் செயல்படாமல் மூடியே கிடக்கின்றன.
இதனால் மாணவர்கள் கல்வி மட்டுமின்றி மனஉளைச்சல், வாழ்வியல் மாற்றங்கள் போன்றவை காரணமாகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலைமையைச் சரிசெய்ய அரசாங்கம் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இதைக் கருத்தில்கொண்டு மாநிலம் தழுவிய அளவில் 200 கோடி ரூபாய் செலவில் கற்றல், கற்பித்தல் இயக்கம் ஒன்றை மாநில அரசாங்கம் விரைவில் நடைமுறைப்படுத்தும் என்று சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
ஆசிரியர்கள், பட்டதாரி மாணவர்கள், தொண்டூழியர்கள், அரசு சாரா நிறுவனங்களின் ஆதரவுடன் கல்வியாளர்களின் வழிகாட்ட லுடன் பள்ளிக் கல்வித் துறை இந்த இயக்கத்தை அடுத்த ஆறு மாதத்திற்கு முன்னெடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 காரணமாக 2020 மார்ச் 20ஆம் தேதி முதல் சிறார்களுக்கு முறையான கல்வியைக் கற்பிக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. கல்வித் தொலைக்காட்சி ஒளிவழிகள், இணையம் வழி கல்வி என்று பல திட்டங்களைத் தொடங்கினாலும் குக்கிராம மக்களை எட்ட முடியவில்லை என்று அமைச்சர் சுட்டினார்.
இதைக் கருத்தில்கொண்டு புதிய இயக்கம் இடம்பெறும் என்றார் அவர்.

