சென்னை: தமிழ்நாட்டில் பல ஆண்டு காலமாக அதிகரித்து வந்த சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து இருக்கிறது.
கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக நடப்புக்கு வந்த கட்டுப்பாடுகளே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
சென்ற ஆண்டு ஜனவரிக்கும் டிசம்பருக்கும் இடையில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 8,060 பேர் மரணம் அடைந்தனர். இதற்கு முன்னதாக 1995ஆம் ஆண்டில்தான் சாலை விபத்து மரண எண்ணிக்கை 9,000ஐ விட குறைந்து இருந்தது என்று அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு வாகனங்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் குறைவாக இருந்தது. இப்போது இந்த எண்ணிக்கை 3 கோடியைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ல் சாலை விபத்துகள் காரணமாக 17,218 பேர் மரணமடைந்துவிட்டார்கள். இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து 2019ல் 10,525 ஆக இறங்கியது என்று போக்குவரத்துத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்ற ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் 98.16% விபத்துகள் வாகன ஓட்டுநர்களின் கவனக் குறைவு காரணமாக நிகழ்ந்தன. தலைக்கவசம் அணிந்திருந்தால் மோட்டார்சைக்கிள் பயணிகளில் ஏறத்தாழ 45% பேர் உயிர் பிழைத்து இருக்கலாம் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது.
சாலை விபத்துகளில் மாண்டவர்களில் 37% மோட்டார்சைக்கிள் ஓட்டிகள் மற்றும் பயணிகள்.
அளவுக்கு அதிக வேகம், அளவுக்கு அதிகமாக பொருட்களையும் ஆட்களையும் சரக்கு வாகனங்களில் ஏற்றிச் செல்வது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, சிவப்பு விளக்கை மீறி செல்வது, வாகனம் ஓட்டும்போது கைபேசியில் பேசுவது ஆகியவையே விதிமீறல் சம்பவங்களில் குறிப்பிடத்தக்கவை.
சென்ற ஆண்டில் 111,053 உரிமங்கள் ரத்தானதாக மூத்த போக்குவரத்து அதிகாரி கூறினார்.

