சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த தாதியர் கல்லூரியில் பயிலும் 13 மாணவிகளுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அங்கு படிக்கும் 176 மாணவிகளும் விடுதியிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
மாநிலத்தில் கடந்த 16ஆம் தேதி முதல் மருத்துவக் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. ஆனால் மாணவிகளுக்குத் தொற்று ஏற்பட்டதை அடுத்து கல்லூரிகள் மீண்டும் மூடக்கூடிய நிலை ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, தமிழகத்தில் கொவிட்-19 தொற்று இறங்கி வருவதாகவும் வியாழக்கிழமை புதிதாக 1,702 பேருக்குத் தொற்று ஏற்பட்டதாகவும் 29 பேர் மாண்டுவிட்டதாகவும் அதிகாரபூர்வ தகவல் தெரிவித்தன.
இவ்வேளையில், தமிழ்நாட்டில் 60 கிராமங்களில் 100 விழுக்காடு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுவரை ஏறத்தாழ 2 கோடியே 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மாநில சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

