சிவகங்கை: பொள்ளாச்சியில் நிகழ்ந்த பாலியல் சம்பவத்தைப் போல் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் பெரிய அளவில் பாலியல் கொடுமைகள் நிகழ்ந்திருக்கலாம் என்று போலிசார் சந்தேகப்படுகிறார்கள்.
இணையத்தில் வலம் வரும் இரண்டு காணொளிகள் இந்த விவகாரத்தில பெரும் பரபரப்பைக் கிளப்பி வருவதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன் தொடர்பில் தமிழக ஊடகங்களில் மேலும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த ராஜா என்பவர், அறந்தாங்கி, திருச்சி ஆகிய இடங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி தரும் நிறுவனத்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
ராஜா, தன் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் சிலரை மதுப்பழக்கத்துக்கு அடிமையாக்கி பாலியல் தொழிலில் அவர்களை ஈடுபடுத்தி வந்ததாகவும் ராஜாவே இடைத்தரகராகச் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. வழிக்கு வராத பெண்களை மிரட்டி அவர்களையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த ராஜா முயன்று வந்துள்ளார் எனத் தெரிகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் இடைத்தரகர் ராஜாவை காரைக்குடி அருகே அமராவதிபுதூர் பகுதிக்கு வரவழைத்து சரமாரியாக அவரைத் தாக்கினர்.
இதைக் காட்டும் காணொளி இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. பெண் ஒருவரை பாலியல் தொழிலுக்கு வருமாறு ராஜா அழைத்த ஒலிப்பதிவும் இணையத்தில் வெளியானது.
இதனிடையே, பாலியல் இடைத்தரகர் என்று கூறப்படும் ராஜா, தன்னை சிலர் தாக்கி பணத்தைப் பறித்துக்கொண்டதாக சாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதையடுத்து அந்தக் காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் போலிஸ் அதகாரி ஒருவர், ராஜாவை தாக்கியதாகக் கூறப்படும் பெண்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களைத் திட்டியதாகக் கூறப்படுகிறது. ராஜாவுக்கு ஆதரவாக போலிஸ் அதிகாரி பேசிய ஒலிப்பதிவும் சமூக வலைத் தளங்களில் வெளியாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
சிவகங்கையில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதால் இது பற்றி பெரிய அளவில் விசாரணையைத் தொடங்கும்படி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவத்தைப் போன்று புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ராஜாவும் அவருக்குப் பின்னணியில் உள்ள கும்பலும் இளம் பெண்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கலாம் என போலிசார் சந்தேகிக்கப்படுவதாக ஊடகங்கள் கூறுகின்றன.
இதனிடையே, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பில் இந்த மாதம் அருண் குமார் என்பவர் (இடது படம்) கைதானதை அடுத்து பொள்ளாச்சி விவகாரம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது.
சிபிஐ போலிசார் பொள்ளாச்சியில் முகாமிட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால் மேலும் பலர் சிக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே கடந்த 2019ஆம் ஆண்டு ஐந்து பேரும் கடந்த ஜனவரி மாதம் அதிமுக பிரமுகர் உட்பட மூன்று பேரும் கைதாயினர்.
பொள்ளாச்சி விவகாரம் பற்றிய விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

