ஆட்சியருக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம்
சேலம்: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள பேளூர் கரடிப்பட்டியைச் சேர்ந்த தர்மலாஸ்ரீ என்பவர் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்ட உதவி ஆட்சியராக பணியாற்றுகிறார். இவர் சென்னையை சேர்ந்த டாக்டர் தாமரைக் கண்ணன் என்பவரை மணந்தார்.
ஆட்சியருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இது பற்றி கருத்து கூறிய ஆட்சியர், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படு வதாகத் தெரிவித்தார்.
ஐந்து கிராமங்களில் வெள்ளம்
ஈரோடு: ஈரோடு அருகே மலைப்பாளையத்தில் கீழ்பவானி கால்வாய் உடைந்து மலைப்பாளையம், கரையக்காடு, கண்ண வேலம்பாளையம், நெல்வயல், வரவங்காடு ஆகிய ஐந்து கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியதாக கிராம மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
பிரசாத விபூதியில் கண்ணாடி துகள்கள்: பக்தர்கள் புகார்
காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் சைவத் திருத்தலமாக விளங்கும் காஞ்சிபுரம் ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் பக்தர்களுக்குத் தரம் குறைந்த விபூதி பிரசாதம் கொடுக்கப்பட்டதாகவும் அதில் கண்ணாடி துகள்கள் கிடந்ததாகவும் சில பக்தர்கள் புகார் தெரிவித்ததாக ஊடங்கள் குறிப்பிட்டுள்ளன.
அந்த விபூதியை நெற்றியில் பூசியபோது கண்ணாடி துகள்களால் சிராய்ப்புகள் ஏற்பட்டு இரத்தம் கசிவதாகவும் அவர்கள் தெரிவித்ததால் பக்தர்களிடம் பரபரப்பு நிலவுவதாகத் தகவல்கள் கூறின.
அகரம் சுடுமண் முத்திரை
திருப்புவனம் அருகே
கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய நான்கு இடங்களில் நடந்து வருகின்றன. அகரத்தில் சுடுமண்ணால் ஆன இந்த முத்திரை கிடைத்துள்ளது. இதை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார். படம்: டுவிட்டர்/ தங்கம் தென்னரசு
கிலோ மல்லிகை ரூ.2,500
குமரி: ஓணம் பண்டிகை காரணமாகவும் தேவை அதிகரித்துள்ளதாலும் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சிறப்பு மலர் சந்தையில் அதிகாலையில் ஒரு கிலோ ரூ.1,300க்கு விற்ற மல்லிகைப் பூ பிறகு ரூ.2,500க்கு விற்பனையானது. இந்த திடீர் உயர்வு சில நாட்கள் நீடிக்கும் என்று வியாபாரிகள் எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
மின்துறை அமைச்சர் பாலாஜி:
2.38 லட்சம் டன் நிலக்கரி மாயம்
சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லாமல் பதிவேட்டில் மட்டும் உள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று சென்னையில் வடசென்னை எண்ணூர் அனல் மின்நிலையத்தைப் பார்வையிட்டபோது தெரிவித்தார்.
இருப்பில் இல்லாத நிலக்கரியின் மதிப்பு ரூ.85 கோடி ஆகும் என்றும் தவறு செய்தவர்கள் தப்ப முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
மூக்கணாங்கயிறு: புது விதிகளை உருவாக்க நீதிபதிகள் சூளுரை
சென்னை: மாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு போடப்படுகிறது. இவ்வாறு துளைபோட மிருகவதை தடை சட்டப்பிரிவும் அனுமதிக்கிறது. எனவே, இந்தச் சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டு செந்தில்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், உலக அளவில் மாடுகளைக் கட்டுப்படுத்த இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுவதாகக் கூறினர்.
"இருந்தாலும் இந்த வழக்கின் மூலம் புதிய விதிகளை வகுத்து உலகத்தைப் பின்பற்ற செய்வோம்,'' என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்த வழக்கிற்கு மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

