செப்டம்பர் 13க்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல்

2 mins read
5d304e24-da4e-438e-be1b-c04472e4a205
-

சென்னை: செப்டம்பர் 13ஆம் தேதிக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி மாநிலத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ஊரகம், நகர்ப் புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

இதில் காஞ்சிபுரம், செங்கல் பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2019ல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஊரக உள்ளாட்சிகள் இல்லாததால், தேர்தல் நடக்கவில்லை. செப்டம்பர் 15க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர் தலை நடத்துவதற்கான பணி களில் மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருவதாக தினமலர் தகவல் தெரிவிக்கிறது.

தற்போது சட்டசபை கூட்டம் நடந்து வருவதால் செப்டம்பர் 13 வரை, துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கவுள்ளது. இந்த நேரத்தில், உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்தால் தேர்தல் நடக்கவுள்ள மாவட்டங்களுக்கு திட்டங்களை அறிவிக்க முடியாது. எனவே, செப்டம்பர் 13க்கு பிறகு உள்ளாட்சி தேர்தலை அறிவித்து அக்டோபர் முதல் வாரத்தில் தேர்தலை நடத்தி முடிக்க, மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்பது மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் உள்ளிட்ட அதிகாரி களுடன் சென்னையில் விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடக்க இருக்கிறது.