செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b177cc5a-a075-4c5d-8f44-3da1c7d2ddbf
-

"மீனவர்கள் திருத்தச் சட்டம்

குறித்து விளக்குவோம்"

நெல்லை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள கடல்சார் மீனவர்கள் திருத்தச்சட்டம் குறித்து மீனவர்களிடம் விளக்கி வருகிறோம் என்று மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்து உள்ளார். நெல்லையில் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அலுவலக திறப்பு விழாவில் நேற்று பங்கேற்று அவர் ேபசினார்.

"கடலில் 12 கடல் மைல் தூரம் மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் வரும். 12 முதல் 200 கடல் மைல்கள் வரை மத்திய அரசின் கீழ் வரும். எனவே இந்தச் சட்டத்தை ஒழுங்குபடுத்தி வருகிறோம்.

இதன்மூலம் மீனவர்கள் வளர்ச்சி மேம்படும். உள்நாட்டில் மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்கும். அனைத்து மீனவர்களுக்கும் இந்தச் சட்டம் பாதுகாப்பாக இருக்கும்.

இன்னும் இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. அனைவரிடமும் கருத்து கேட்ட பிறகுதான் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும்" என்று திரு முருகன் சொன்னார். இதுவரை இல்லாத அளவுக்கு மீனவர்கள் நலனுக்காக ரூ.20,000 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு; அதிகாரி மாற்றம்

நெல்லை: சிவசங்கர் பாபா மீதான பாலியல் குற்றச்சாட்டில் அவரது பள்ளியில் படித்த மூன்று மாணவிகள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் மூன்று 'போக்சோ' வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டன. சி.பி.சி.ஐ.டி. போலிசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது ஏற்கனவே ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது 2வது வழக்கிலும் குற்றப்பத்திரிகை தயாராகிவருகிறது. அது, விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் அந்த வழக்கின் விசாரணை அதிகாரியான துணை போலிஸ் சூப்பிரிடென்டண்ட் குணவர்மன் நேற்று முன்தினம் திடீரென்று மாற்றப்பட்டார். அவர் சென்னை மாநகராட்சி 'விஜிலென்ஸ்' அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய ஜெகதீஸ்வரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

புதிய விசாரணை அதிகாரி இன்னும் நியமிக்கப்படவில்லை.