திமுக வேட்பாளர் அப்துல்லா நியமனம்
சென்னை: தமிழகத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக உள்ள நிலையில், செப்டம்பர் 13ஆம் தேதி ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி இந்த தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளராக எம்எம் அப்துல்லா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு இதனை உறுதி செய்துள்ளது.
இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்
சென்னை: கடந்த மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடும் நிலையில், நீா்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் தொடர்ந்து நடைபெற உள்ளது.
இதுகுறித்த விவாதம் தொடர்பாக திமுக, அதிமுக உள்ளிட்ட பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் பேசவுள்ளனா். விவாதங்களுக்கு நீா்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளாா். இக்கூட்டத்தொடா் செப்டம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அமைச்சர் ராஜகண்ணப்பன்: பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது
ராமநாதபுரம்: எவ்வளவுதான் அரசுக்குப் பொருளாதார நெருக்கடி வந்தாலும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், "தமிழகத்தில் தற்போது 16,650 பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட 2.000 பேருந்துகள் அனைத்தும் மீண்டும் இயக்கப்படும். எவ்வளவு நஷ்டம் வந்தாலும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது," என்றவர், போக்குவரத்து துறையில் பணியாற்றுபவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தயாராகி வருவதாகவும் கூறினார்.
பிறந்தநாள் கொண்டாடிய சென்னை
சென்னை: உலகின் 31வது பெரிய நகரமாக விளங்கும் சென்னை நேற்று அதன் 382வது பிறந்தநாளைக் கொண்டாடியது. சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினமான 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதியை நினைவூட்டும் விதமாக, கடந்த 2004ஆம் ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1639ஆம் ஆண்டு முதன்முறையாக ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள பகுதியை வாங்கியது. அதைத்தொடர்ந்து வணிகம் பெருகி சென்னை மாநகரம் விரிவடைந்தது. சென்னையின் பிறந்தநாளைப் போற்றும் விதமாக சென்னை மாநகராட்சி அலுவலகம், கடற்கரை சாலை, நேப்பியார் பாலம் போன்றவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

