மாநகராட்சி: முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி

மாநகராட்சி: முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி

2 mins read
919bd338-b520-49af-a0b1-dfe0597e13fd
-

சென்னை: தலைநகர் சென்னை யில் வசிக்கும் 80 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று கொவிட்-19 தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழக மக்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், ஆங்காங்கே நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலமாகத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் வசிக்கும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி போடப்பட உள்ளது.

"தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்பவர்களின் வீடு களுக்கு 'முதலில் அழைப்பவர் களுக்கு முதல் சலுகை' என்ற அடிப்படையில் சென்று தடுப்பூசி போடப்படும்.

"உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், கர்ப்பிணி, பாலூட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணியில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

"அதேபோல், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி

இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்று முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்படும் எனவும் இதற்கான மருத்துவக் கட்டமைப்புகள் தயார் நிலையில் இருப்பதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தி யாளா்களிடம் கூறியபோது, "தமி ழா்களின் அமெரிக்கா அறக்கட்டளை சாா்பில் ரூ.2.36 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் 15 அரசு மருத்துவமனைகளுக்குப் பிரித்து அனுப்பப்படும்.

"புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அரியலுாா் மாவட்டத்தில் அனைத்து கா்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இனி மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் பணி இன்றுமுதல் தொடரும்," என்று தெரிவித்துள்ளார்.