சென்னை: கோடநாடு வழக்கில் நீதிமன்ற விதிகளின்படியே விசாரணை நடைபெற்று வருவதாகவும் இதில் எந்தவித பழிவாங்கும் நோக்கமோ, அரசியல் உள்நோக்கமோ கிடையாது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார்.
ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு பங்களாவில் நடந்தது சாதாரண சம்பவம் அல்ல என்றும் கொலை, கொள்ளை நடந்துள்ளது என்றும் குறிப்பிட்ட அமைச்சர், கோடநாடு தமக்கு எத்தனை முக்கியமான இடம் என்பதை ஜெயலலிதாவே முன்பு விளக்கி உள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
"ஜெயலலிதா இருக்கும் காலத்தில் அந்தப் பங்களாவில் ஒரு தலைமைச் செயலகமே இயங்கிஉள்ளது. அப்படிப்பட்ட இடத்தில் நடந்த உண்மைகளை தெரியப்படுத்த வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.
"ஆனால், இது முக்கியமான விஷயம் கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். அவருக்கு வேண்டுமானால் இது முக்கியமான விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதிமுகவில் உள்ள தொண்டர்களுக்கு இது முக்கியமான விஷயமாக இருக்கிறது," என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் குறித்தும் அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து விவரம் கேட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலா, முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆகிய இருவரையும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் இந்த மனு, தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு கோடநாடு கொலை வழக்கில் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கொள்ளை சம்பவத்தின்போது காணாமல் போன பொருள்கள் குறித்து சசிகலா, இளவரசி தரப்பினருக்குத்தான் அனைத்து விவரங்களும் தெரியும் என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், கோடநாடு வழக்கு இப்போது 'நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், அதுகுறித்து சட்டப்பேரவையில் பேசக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

