சென்னையில் லேசான நில அதிர்வு
சென்னை: நேற்று மதியம் ஏற்பட்ட லேசான நில அதிர்வு காரணமாக சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது. மதியம் சுமார் 2.39 மணியளவில் ஏற்பட்ட நில அதிர்வை திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்களால் உணர முடிந்தது. எனினும் இந்த நில அதிர்வு காரணமாக சேதங்கள் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதாகை கலாசாரம்: முதல்வர் வருத்தம்
சென்னை: தமிழகத்தில் பதாகைகள் வைக்கும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். பலமுறை கண்டித்த பின்னும் பதாகைகள் வைக்கும் விரும்பத்தகாத, கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்வது தம்மை வருத்தமடைய வைப்பதாக அவர் அறிக்கை ஓன்றில் குறிப்பிட்டுள்ளார். "திமுக நிகழ்ச்சிகளுக்காக பதாகை வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது போன்றவை பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் சோகமும் நடந்துவிடுகிறது. விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம் அடைந்திருப்பது எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது," என முதல்வர் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.
பாஜக மாவட்ட தலைவர்களுக்கு அண்ணாமலை எச்சரிக்கை
சென்னை: உட்கட்சிப் பிரச்சினைகளை காரணம் காட்டி கட்சிப் பணிகளில் சுணக்கம் காட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அக்கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுவரை நடந்தது நடந்ததாக இருக்கட்டும் என்றும் இனி மாவட்டத் தலைவர்களின் செயல்பாடுகள் துல்லியமாக கண்காணிக்கப்படும் என்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியபோது அவர் குறிப்பிட்டார். "கட்சி வளர்ச்சிப் பணிகளில் ஆர்வம் காட்டாத, சிறப்பாக செயல்படாத மாவட்டத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும். அடுத்த ஒரு மாதத்தில், மூன்று மாதங்களில், ஆறு மாதங்களில், ஓராண்டில் என்ன செய்யப் போகிறீர்கள் என்று இலக்கு நிர்ணயித்துச் செயல்பட வேண்டும்," என்றார் அண்ணாமலை. அவரது இந்த அதிரடிப் போக்கு கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட இயலாது: சிவசங்கர் பாபா வாக்குமூலம்
சென்னை: பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா சிபிசிஐடி போலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தமக்கு ஆண்மை இல்லை என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் மீது மூன்று 'போக்சோ' வழக்குகள் பதிவாகி உள்ளன. இதுவரை அவருக்கு பிணை கிடைக்கவில்லை. தமக்கு ஆண்மை இல்லை என்பதால் யாரையும் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்று சிவசங்கர் பாபா தெரிவித்துள்ள நிலையில், ஆண்மையற்றவர் என்று கூறுபவர் எப்படி இரு குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு: இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது
மதுரை: இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் விவகாரத்தில் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றில் மத்திய வெளியுறவு, உள்துறை அமைச்சுகளின் செயலாளர்கள், இலங்கைக்கான இந்திய துணை ஆணையர் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், சட்டவிரோதமாக இந்தியா விற்குள் வந்தவர்கள் குடியுரிமை சட்டம் 1955இன் படி சட்ட ரீதியான குடியுரிமை தகுதியைக் ேகார முடியாது என்றும் சட்டத்திற்கு உட்பட்டே எந்த முடிவையும் எடுக்க இயலும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாடு செல்லும் விஜயகாந்த்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக விரைவில் வெளிநாடு செல்ல இருப்பதாக அக்கட்சித் தலைமை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாட இருக்கும் அவரை நேரில் சந்திக்க யாரும் வரவேண்டாம் என்றும் கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் செல்லும் தமிழக அரசு
சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறது. தமிழக அரசின் கருத்தைக் கேட்காமலேயே பசுமை தீர்ப்பாயம் முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு சுட்டிக்காட்டி உள்ளது.

