சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், தலைநகர் சென்னையில் உள்ள இருநூறு வார்டுகளிலும் தலா ஒன்று என மொத்தம் 200 தடுப்பூசி மையங்கள் செயல்படும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
சென்னையில் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்றும் இதுவரை மாநகரில் 3.68 மில்லியன் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 2.57 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்.
மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும்போது 30 விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவானது.
சென்னை போன்ற பெருநகரங்களான கோல்கத்தாவில் 5.29 மில்லியன் பேரும் மும்பையில் 8.66 மில்லியன் பேரும் பெங்களூரில் 9.61 மில்லியன் பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.
சென்னையில் இப்போது அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் மக்கள் வெகுதூரம் சென்று தடுப்பூசி போடும் நிலையில் இருக்கிறது.
"எனவே மக்கள் எளிதில் அணுகக்கூடிய இடங்களில் முகாம்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அதன்படி சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் தலா ஒரு நிரந்தர தடுப்பூசி மையம் என்று 200 மையங்கள் திறக்கப்படும்," என்றார் அமைச்சர் சுப்பிரமணியன்.
இதற்கிடையே, 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் திட்டத்தையும் சென்னை மாநகராட்சி தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் நேற்று முன்தினம் மேலும் 1,604 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியானது. மேலும் 172 பேர் பலியாகிவிட்டனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

