சிவகங்கை: அகழாய்வின்போது பழங்கால தங்கக்காதணி கண்டெடுக்கப்பட்டது கீழடியில் முகாமிட்டுள்ள தொல்லியல் நிபுணர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள அகரம் பகுதியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த சில வாரங்களில் மட்டும் ஆய்வின்போது உறை கிணறுகள், பானைகள், செங்கல் கட்டுமானம், புகைபிடிப்பான் கருவி, விலங்கு உருவ பொம்மை, தலையலங்காரத்துடன் கூடிய பெண் பொம்மை உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.
இது உலகத் தமிழர்களை வியப்படைய வைத்துள்ளது. இந்நிலையில் தங்க அணிகலன்கள் சில கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓர் அணிகலன் அறுங்கோண வடிவிலும் நடுவில் ஒரு துளையும் அதனை இணைப்பதற்கு வசதியாக குச்சி போன்ற அமைப்புடனும் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்றோர் அணிகலன் தங்கக் குண்டுபோல் காட்சியளிப்பதாகக் கூறப்படுகிறது.
கீழடி அகழாய்வுப் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு ஏராளமான பொருள்கள் கிடைத்து வருகின்றன.
எனவே ஆய்வுப்பணியை மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

