சென்னை: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது அமைச்சர்கள் அதிகம் குறுக்கிட வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இதைப் பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
சட்டப்பேரவையில் இப்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
எதிர்க்கட்சிகள் எழுப்பும் பல்வேறு துறை சார்ந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சில கருத்துகளைத் தெரிவிக்க, அவற்றுக்கு அமைச்சர்கள் கே.என்.நேருவும் பெரிய கருப்பனும் உடனுக்குடன் பதில் அளித்தனர்.
இதனால் எஸ்.பி.வேலுமணி பேச்சில் அமைச்சர்கள் இருவரும் அடிக்கடி குறுக்கிட வேண்டி இருந்தது.
இதைக் கவனித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சியினர் சும்போது அமைச்சர்கள் அதிகம் குறுக்கிட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
"எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏதேனும் முறைகேடுகள், குற்றச்சாட்டுகள் குறித்து பேசினால் மட்டும் இடைமறித்து பதில் கூறலாம். இல்லையெனில், அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு அமைச்சர்கள் தங்களுடைய பதில் உரையின்போது உரிய விளக்கங்களை அளிக்கலாம். அமைச்சர்கள் இதற்கு ஓத்துழைப்பு வழங்க வேண்டும்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

