சென்னை: தமிழர்களின் வரலாற்றைத் திரிக்கும் முயற்சியில் ஒரு தரப்பினர் ஈடுபடுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.
இதன் மூலம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை இழிவுப்படுத்தி, அவர்களது தாயகப் பற்றையும், இன உணர்வையும் மழுங்கடிக்கச்செய்யும் வஞ்சகச்செயல் திட்டமிட்டு அரங்கேற்றப்படுவதாக நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை ஓன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளில், 'அனைத்துலகத்தமிழர் கல்விப்பேரவை' எனும் அமைப்பினால் வெளியிடப்பட்டிருக்கும் தமிழ் குழந்தைகளுக்கான தமிழ்ப்பாடப் புத்தகங்களில் தமிழர்களின் வரலாறு திரிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழினத்தின் பழம்பெருமையையும் பெரும் புகழையும் பறைசாற்ற வரலாற்றுச்சான்றுகள் இல்லாது இலக்கியச்சான்றுகளே தரவுகளாக இருப்பது எந்தவொரு இனத்திற்கும் நேர்ந்திடக்கூடாப் பெருந்துயரம்," என சீமான் கூறியுள்ளார்.
புலம்பெயர் நாடுகளில் சில அமைப்புகள் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதுபோன்ற அமைப்புகளால் பாடநூல்கள் எனும் பெயரில் தமிழர்களின் வரலாறு திரிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டுச் செய்யப்படும் அவதூறு பரப்புரைகளையும் உள்நோக்கத்துடனான பொய் உரைகளையும் தடுத்து முறியடிப்பது அவசியம் என்றும் உலகத்தமிழர்களைக் கேட்டுக்கொள்வதாகவும் சீமான் மேலும் கூறியுள்ளார்.

