செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
20855a9e-b672-48af-b702-9112c4aad9b9
-

உள்ளாட்சித் தேர்தல்: அரசு உறுதி

சென்னை: தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக நடத்தி முடிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் மீது திமுக தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக்கூறி திமுக வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, மிக விரைவில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக நடத்தி முடிக்கப்படும் என்றும் அரசுத் தரப்பு தெரிவித்தது. தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டி உள்ளது.

நடிகர் விவேக் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தக் கோரி மனு

சென்னை: நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டாவது நாள் மரணமடைந்தது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனித உரிமை ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஒருவர் அம்மனுவை அளித்துள்ளார். அதை ஏற்று விசாரணை நடத்தப்படும் என மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

கேரளாவுக்கு கடத்தப்படும் தமிழக கனிம வளங்கள்: சரத்குமார் குற்றச்சாட்டு

சென்னை: கேரளாவில் நடைபெற்று வரும் விழிஞ்ஞம் அனைத்துலக துறைமுக திட்டப் பணிகளுக்காகவும் தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலை பணிகளுக்காகவும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். நாள்தோறும் 600 லாரிகளில் அனுமதி இன்றி இந்த கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுவதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். "கேரள மாநிலத்தின் தேவைக்காகக் கட்டப்படும் துறைமுகத்திற்கு தென்மாவட்ட கனிம வளங்களை ஏன் பலிகொடுக்க வேண்டும்? இதை இப்போது அலட்சியப்படுத்தினால் வருங்காலத்தில் மலைகளின்றி வறண்ட, வளமற்ற, நீர் ஆதாரமற்ற பகுதியாக தென்மாவட்டம் உருவாகிவிடும் சூழல் ஏற்படும்," என சரத்குமார் எச்சரித்துள்ளார்.

நடிகர் ஆர்யா பெயரில் ஜெர்மனி பெண்ணிடம் மோசடி: இருவர் கைது

சென்னை: நடிகர் ஆர்யாவைப் போல் பேசி ஜெர்மனியைச் சேர்ந்த விட்ஜா என்ற இளம் பெண்ணை ஏமாற்றி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவர் கைதாகினர். தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ஆர்யா பண மோசடி செய்ததாக விட்ஜா புகார் எழுப்பி இருந்தார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பிய அவர், நீதிமன்றத்தையும் அணுகினார். போலிசார் அது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது விட்ஜாவைப் பற்றி தனக்கு எந்த விவரமும் தெரியாது என்று ஆர்யா கூறியிருந்தார். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த முகமது அர்மான், முகமது ஹுசைனி ஆகிய இருவரும்தான் ஜெர்மனியில் இருந்த விட்ஜாவிடம் ஆர்யா பெயரில் தொடர்புகொண்டு பேசி பண மோசடி செய்தனர் என்று தெரியவந்துள்ளது.

தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் புதிதாக 1,585 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. 25 பேர் உயிரிழந்துவிட்டனர். இதற்கிடையே, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஆசிரியர்களுக்கு பள்ளிக்கூடத்தில் அனுமதி இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.