விருதுநகர்: அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டிருப்பது அவசியம். ஏதாவது ஓர் ஆசிரியர் தடுப்பூசி போடாமல் இருந்தாலும் கூட பள்ளியைத் திறப்பதற்கு அனுமதி கிடையாது. அத்துடன், தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
கொரோனா கிருமிப் பரவல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன. அப்போது, 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்த திட்டம் வகுத்துள்ளனர்.
இதற்கான ஆயத்தப் பணிகளில் கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அண்மையில் சுகாதாரத்துறை வெளியிட்டிருந்த அறிவிப்பில், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் இதர பணியாளர்களும் கண்டிப்பாக இரு முறை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் இரு முறை தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணியில் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
இதற்கிடையே, விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அந்த மாவட் டத்தைச் சேர்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ஓர் ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் கூட அவர் பாடம் சொல்லித் தரும் பள்ளியைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் குறிப்பிட்ட ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்ட ஆசிரியர்கள் அனைவரும் தங்களின் தடுப்பூசி சான்றிதழ்களை நாளைக்குள் தலைமை ஆசிரியர்களிடம் தாக்கல் செய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மத்திய சுகாதார அைமச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர்கள் தினக் கொண்டாட்டத்துக்கு முன்பாக அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட்டு முடிக்கவேண்டும் என அனைத்து மாநிலங்களையும் நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

