சென்னை: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசு காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ளவில்லை என தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் அன்பழகன், விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதாகக் குற்றம்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், காழ்ப்புணர்ச்சி இருந்தால் அம்மா உணவகம் தற்போது செயல்பட்டிருக்காது என்றும் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளும் எந்த எண்ணமும் திமுக ஆட்சிக்குக் கிடையாது என்றும் கூறினார்.
இதுகுறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது, "பெயர் வைக்கவேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதா பல்கலைக்கழகத்தைக் கொண்டு வந்தது அதிமுக அரசு. நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள இசைப் பல்கலைக் கழகம் ஜெயலலிதா பெயரில்தான் இயங்கி வருகிறது" என்று கூறினார்.

