மதுரை: ஒன்றரை வயது பெண் குழந்தையைக் கிணற்றில் வீசி கொலை செய்ததாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 17 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சகுந்தலா என்ற பெண் தற்போது நிரபராதியாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், தாத்தை யங்கார் பேட்டையைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சகுந்தலா. இப்போது 49 வயதாகிறது. இவர்களது இரு மகள்களில் ஒரு மகளுக்கு ஒன்றரை வயது.
குடும்ப சண்டை காரணமாக கணவரிடம் கோபித்துக்கொண்டு 2002ல் தனது அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார் சகுந்தலா.
அடுத்த நாளே அவரது ஒன்றரை வயது குழந்தை கிணற்றில் சடலமாக மிதந்தது.
இதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்ட நீதிமன்றம் சகுந்தலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
இந்தத் தண்டனையை ரத்து செய்யக்கோரி, கடந்த 2014ல் சகுந்தலா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அது தள்ளுபடியாகிவிட்டது.
அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி உத்தரவிட்டது.
அந்த வழக்கு நேற்று மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
சகுந்தலாவின் வழக்கறிஞர் வாதாடும்போது, உடற்கூறு அறிக்கையில், "குழந்தையின் குடல், நுரையீரலில் தண்ணீர் இல்லை. குழந்தை இறந்த பிறகே சடலம் கிணற்றில் வீசப்பட்டுள்ளது. சகுந்தலா தனது பெற்றோர் வீட்டிற்குத் தனியாகத்தான் சென்றுள்ளார். அதனால் அவரை விடுவிக்கவேண்டும்," என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், சகுந்தலாவுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து, அவரிடம் அபராதத் தொகையை திருப்பி ஒப்படைக்கவேண்டும்," என்று தீர்ப்பளித்தனர்.

