கரூர்: கரூர் வாழைக்காய் மண்டியில் ஓர் ஆளுயரத்துக்கும் மேலாக காய்த்துப் பழுத்திருந்த ஏழடி உயர வாழைத்தார்கள் ஏலம் விடப்பட்டன. இதை கரூர் நகரப் பொதுமக்களும் வியாபாரிகளும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொத்தனூர், இடையாறு ஆகிய பகுதிகளின் காவிரிக் கரையோரம் இருபதுக்கும் மேற்பட்ட கற்பூரவள்ளி வாழைத்தார்கள் விளைந்திருந்தன.
ஐந்தடி முதல் ஏழடி உயரம் கொண்ட அந்த வாழைத்தார்களை வாழை விவசாயிகள் கரூர் சந்தையில் ஏலமிட்டனர்.
குறைந்தது 350 பழங்களைக் கொண்ட ஏழடி உயர வாழைத்தார்கள் தலா ரூ.1,100க்கு ஏலத்தில் விற்பனையானதால், அதை விளைவித்த விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
கற்பூரவள்ளி, பூவன், ரஸ்தாலி, ஏழரசி, மொந்தன், பச்சைப்பழம் உள்ளிட்ட வாழை வகைகளும் ஏல மிடப்பட்டன. கரூர் வரலாற்றிலேயே ஏழடி உயரம் கொண்ட வாழைத்தார் இப்போதுதான் விளைந்திருப்பதாக அவற்றை விளைவித்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

