செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
925500c5-40be-4d6d-a69c-59631aa786ae
-

'சின்னப்பையா வந்துடுடா' என கதறிய பெற்றோர்

நாமக்கல்: பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு, காதலனுடன் செல்லத் தயாரான 18 வயது மகளை பிரிய மனமில்லாமல் 'சின்னப்பையா வந்துடுடா' என்று மகளைப் பார்த்து பெற்றோர் கெஞ்சி அழுதது காண்போரைக் கலங்க வைத்தது. ராசிபுரத்தைச் சேர்ந்த பவதாரணி, அதே பகுதியில் வசித்த மணி, 25, என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். பாதுகாப்பு கோரி நாமக்கல் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த தம்பதியரை போலிஸ் வாகனத்தில் அழைத்துச் செல்ல முற்பட்டபோது, அங்கு வந்த பவதாரணியின் அப்பா பச்சியப்பனும் தாய் சிந்தாமணியும் தங்களது மகளைக் கீழே இறக்கிவிடும்படி வாகனம் முன்பு படுத்து அழுது புரண்டனர். இதனால் ஜீப்பை போலிசாசாரால் ஓட்ட முடியவில்லை. இதையடுத்து, காதல் ஜோடியை போலிசார் வேறு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். படம்: ஊடகம்

'கலைஞர் நூலகம் அமையும் இடத்தில் எனது தாத்தா வசிக்கவில்லை'

மதுரை: மதுரை நத்தம் சாலையில் ரூ.70 கோடி செலவில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நூலகம் அமைய உள்ளது. இந்த நூலகம் அமைய உள்ள இடத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னி குயிக் வாழ்ந்ததாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், தனது தாத்தா அங்கு வசிக்கவில்லை என லண்டனில் வசிக்கும் பென்னி குயிக்கின் பேரன் ஸ்ரூவர்ட் சாம்சன் மின்னஞ்சல் வழி தகவல் தெரிவித்துள்ளார்.

"பென்னி குயிக் நினைவு இல்லத்தை அகற்றி, கலைஞர் நூலகமாக மாற்ற தி.மு.க அரசு நினைப்பது சரித்திரத்தை சிதைப்பதற்குச் சமம்," என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன்: உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களத்தில் இறங்குவோம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று கூறியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.

"மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தேர்தல் அறிக்கை தயார் செய்யவேண்டும். தேர்தல் கூட்டணி என்பது அந்த நிமிடம் அமையும் கூட்டணியாகவே இருக்கும். கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் கட்சி நிர்வாகிகள் அதிக கவனம் செலுத்திட வேண்டும்'', என்றார் கமல்ஹாசன்.

மருத்துவ மாணவர்களிடம் ரூ.50 லட்சம் அபராதம் வசூலிக்க உத்தரவு

சென்னை: அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இரண்டு ஆண்டுகள் பணி செய்யவேண்டும் என்ற விதியை மீறிய மாணவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய் வசூல் செய்ய வேண்டும் என மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

மூன்றாண்டு படித்து முடித்தபிறகு மருத்துவமனைகளில் காலி இடங்கள் இருந்தும் பலர் பணியில் சேர விரும்பாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.