சென்னை: டெல்லியில் திமுக அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. சுமார் 10,000 சதுர அடியில் 4 மாடிகளைக் கொண்ட இந்த அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அருங்காட்சியகமும் அமைக்கப்படுகிறது. இந்த கட்டடத்துக்கு 'கலைஞர் அறிவாலயம்' எனப் பெயரிடப்படுகிறது.
கலைஞர் அறிவாலயம் தற்போது திறப்பு விழா காண இருக்கிறது. சென்னையில் செப்டம்பர் 15-ந் தேதி திமுகவின் முப்பெரும் விழாவை நடத்திவிட்டு மறுநாள் டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். செப்டம்பர் 17, 18 ஆகிய இரு நாட்கள் அவர் அங்கு தங்கியிருக்கும்போது கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் என எல்லாக் எதிர்க்கட்சித் தலைவர்களையும் அழைக்க திட்டமிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இதற்கிடையே, பாஜக மற்றும் தேசி ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சித் தலைவர்களையும் கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கு அழைக்கலாம் என திமுகவின் மூத்த எம்.பி.க்கள் தெரிவித்த யோசைனையை ஸ்டாலின் பரிசீலித்து வருவதாக திமுக வட்டாரங்கள் கூறின.

