மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிைறவேற்றம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் தீர்மானத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த புதிய சட்டங் களால் தங்களது வாழ்வாதாரம் பறி போகும் என்றும் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் பல மாதங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளிடம் மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.
இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், "மூன்று வேளாண் சட்டங் களையும் முழுமையாக எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது, இந்தச் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. வேளாண் சட்டங்கள் வேளாண்மையை அழிப்பதுபோல இருப்பதாக விவசாயிகள் சொல்கிறார்கள். அதனை எதிர்த்து போராட்டமும் நடைபெற்று வருகிறது. விவசாயி களின் வாழ்வு செழிக்க மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுகிறேன்," என்று கேட்டுக் கொண்டார்.
இந்தத் தீர்மானத்திற்கு ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
தீர்மானத்தின் மீது பேசிய பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன், "விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு பெரும் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் வேளாண் சட்டங்கள் உள்ளன," என்று தெரி வித்தார்.
பா.ம.க சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே. வேலுமணி, "விவசாயிகள் மத்தியில் வேளாண் சட்டம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது," என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, "போராடும் விவசாயிகளுக்கு நான் இருக்கிறேன் என்பதை தெரியப் படுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேளாண் சட்டங் களுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்," என்றார்.
ஆனால் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க மறுத்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்களும் வெளி நடப்பு செய்தனர்.
பின்னர் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று நிறைவேற்றப் பட்டது.

