சென்னை: கோவில்களில் விரைவில் திருப்பணிகளை முடித்து குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறிஉள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கோவில் மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது பேசிய அமைச்சர் சேகர் பாபு, "கோவில்களில் விரைவில் திருப்பணிகளை முடித்து குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகளை அதிகப்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தி பள்ளி வளாகத்தை தூய்மையாக வைக்க வேண்டும். பக்தர் களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்," என்றார். "ஆக்கிரமிப் பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ.625 கோடி மதிப்பு நிலங்களை முறையாக பராமரித்து வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் யானை களுக்கு மாதம் ஒரு முறை மட்டுமே மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இனி 15 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்," என்று அமைச்சர் கூறினார்.

