தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள ஓசனூத்து கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர், தன்னிடம் இச்சாதாரி நாகத்திடம் இருந்து எடுக்கப்பட்ட நாகமணி இருப்பதாக ஊர்வாசிகளிடம் கூறியுள்ளார்.
விலை மதிக்க முடியாத அந்த நாகமணியை வாங்கினால் பொன், பொருள், புகழ் எல்லாம் தேடி வரும் என்றும் அள்ள அள்ளக் குறையாத செல்வம் பெருகும் என்றும் ஊரில் இருந்த செல்வந்தர்களிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதுகுறித்து அதே ஊரைச் சேர்ந்த பழனி என்ற நபருக்கும் தெரியவர, நாகமணியை அபகரிக்க எண்ணிய பழனி, அதை வாங்கு வதாகப் பாசாங்கு செய்து சுப்பிர மணியனைக் காட்டில் சந்தித்தார்.
நாகமணி குறித்து இருவருக்கும் மோதல் ஏற்பட, அங்கிருந்த வேல்முருகன் என்ற இன்னொரு ஆடவர் நாகமணியைத் திருடிக்கொண்டு தப்பித்துவிட்டார்.
போலிசாரிடம் சுப்பிரமணியன் புகார் அளித்தபோது, நாகமணி திருடப்பட்டதாகக் கூறினால் மாட்டிக்கொள்வோமோ என்று எண்ணி தனது பணம், கைபேசி திருடப்பட்டதாகக் கூறிவிட்டார்.
வேல்முருகன் இருந்த இடத்தைக் காவலர்கள் கண்டுபிடித்து விசாரித்தபோது, திருடப்பட்டது இச்சாதாரி பாம்பின் நாகமணி என்பது தெரியவந்தது. நாகமணியைக் கைப்பற்றிய போலிசார், அது வெறும் மஞ்சள் நிறத்திலான மின்னும் சாயம் பூசப்பட்ட பிளாஸ்டிக் என கண்டுபிடித்தனர்.

