செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
d82e59f8-4542-4596-9549-877d594e89eb
-

செங்கோட்டையன்: ஆளுங்கட்சிக்கு

எதிர்க்கட்சி உறுதுணை நிற்கும்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் இந்நாள் எம்எல்ஏவுமான செங்கோட்டையன் பேசியபோது, தமிழக சட்டசபை கண்ணியத்துடன் செயல்படுவதாகப் பாராட்டினார்.

"தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு

7.5% இடஒதுக்கீடு வழங்க தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட முன்வடிவு அடித்தட்டு மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுள்ளது புலனாகிறது. முதல்வர் நல்ல திட்டத்தை அறிவித்துள்ளார். கல்வி ஒன்றால் மட்டுமே பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்பதால், ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சி உறுதுணை நிற்கும்,'' என்று செங்கோட்டையன் கூறினார்.

38,000 ஆதரவற்ற பெண்களுக்கு தலா ஐந்து ஆடுகள் இலவசம்

சென்னை: ஆதரவற்ற, கணவனை இழந்த, கைவிடப்பட்ட 38,800 பெண்களுக்கு ரூ.75.6 கோடி ஒதுக்கீட்டு நிதியில் இருந்து தலா ஐந்து செம்மறியாடுகள், வெள்ளாடுகள் வழங்கப்படும் என மீன்வளம், கால்நடைத் துறை அமைச்சா் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 85 கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு ரூ.54 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

விவசாயிகளின் குறைகளைக் களைய எம்எல்ஏக்களுக்கு உத்தரவு

சென்னை: 'விவசாயிகளுடன் ஒரு நாள்' என்ற புதிய திட்டத்தின்கீழ் அனைத்து எம்எல்ஏக்களும் தங்களது தொகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று, அங்குள்ள விவசாயிகளுடன் பேசிப் பழகி, அவர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து, அதற்கு தீர்வு காண முதல்வர் உத்தரவு பிறப்பித்து உள்ளதாக வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுடன் மாதம் ஒரு நாள் இந்தச் சந்திப்பு நடைபெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நீலகிரிக்கு சிவப்பு எச்சரிக்கை

நீலகிரி: அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாளை வரை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருவதை அடுத்து ஊட்டி-நீலகிரி மாவட்டத்திற்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. "சிவப்பு எச்சரிக்கை காரணமாக பேரிடரை எதிர்கொள்ள தீயணைப்பு, மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர். தேவையெனில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வருவர்,'' என்று மாவட்டத் தீயணைப்புத் துறை அலுவலர் ஆர்னிஷா பிரியதர்ஷினி கூறினார்.

போக்குவரத்து அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்ய உத்தரவு

சென்னை: ஓட்டுநராகப் பணியாற்றிய சீனிவாசன் என்பவர் போலிச் சான்றிதழை சமா்ப்பித்ததால் 2003ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டாா். இந்த உத்தரவை வேலூர் தொழிலாளர் நல நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிா்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சீனிவாசன் மனுத்தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில், "மனுதாரா் போலிச் சான்றிதழைச் சமா்ப்பித்தது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மீண்டும் பணி வழங்க முடியாது. எனவே, அவரது வழக்கைத் தள்ளுபடி செய்கி றேன். அதேநேரம், போலிச் சான்றிதழ் அளித்தவா்களுக்குப் பணி நியமனம் வழங்கிய போக்குவரத்துத் துறை அதிகாரி களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவா்களை யும் பணிநீக்கம் செய்யவேண்டும்," எனக் கூறியுள்ளாா்.