சென்னை: தமிழ்நாட்டிற்கு மேலும் 1,176,000 கொவிஷீல்டு தடுப்பூசிகள் நேற்று வந்து சேர்ந்தன.
மாநிலத்தின் எல்லா மாவட்ட மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி போடும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை மறுநாள் 1ஆம் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன.
அதற்குமுன் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதனையடுத்து, கூடுதலாகத் தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும்படி மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
அதனை ஏற்றுக்கொண்ட மத்திய சுகாதாரத் துறை, புனே நகரில் உள்ள மத்திய மருந்துக் கிடங்கில் இருந்து தமிழகத்திற்கு 11.76 லட்சம் கொவிஷீல்டு தடுப்பூசிகளை விடுவித்தது.
அந்தத் தடுப்பூசிகள் அடங்கிய 98 பெட்டிகள் சென்னை விமான நிலையத்தை நேற்று வந்தடைந்தன.
அவற்றில் 1,155,170 தடுப்பூசிகள் மக்கள் நல்வாழ்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. எஞ்சிய 20,830 தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன.
1.7 மி. தடுப்பூசிகள் கையிருப்பு
இதனிடையே, தமிழ்நாட்டில் 17 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தில் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 23 லட்சம் தடுப்பூசிகள் பெறப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். அத்துடன், மாநிலத்தில் 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

