கீழடி அகழாய்வு: ராமதாஸ் வலியுறுத்து

கீழடி அகழாய்வு: ராமதாஸ் வலியுறுத்து

1 mins read
1b4e855b-cc97-47a4-9cfd-bc7e6639dc19
-
Google News Preferred Icon

சென்னை: கீழடி அகழாய்வின் முடிவுகளுக்காகத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வாழும் பத்துக் கோடிக்கும் கூடுதலான தமிழர்கள் காத்துக் கிடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

கீழடியில் நடைபெற்ற முதல் 3 கட்ட அகழாய்வு அறிக்கைகளை உடனடியாக வெளியிடும்படி மத்திய அரசுக்குத் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்று அறிக்கை ஒன்றில் அவர் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், ஐந்து, ஆறாம் கட்ட அகழாய்வு அறிக்கைகளைத் தமிழக அரசு விரைவாக வெளியிட வேண்டும் என்றும் ஏழாம் கட்ட அகழாய்வை மேலும் நீட்டிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

"மதுரை அருகே கீழடியில் தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை நடத்தி வரும் ஏழாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள்கள் 'உலகின் மூத்த நாகரிகம் தமிழ் நாகரிகம்' என்பதை நிரூபிக்கத் தேவையான அளவுக்கு இருக்கும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது," என்று ராமதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழர் நாகரிகத்தின் தொன்மைக்குக் கட்டியங்கூறும் ஏராளமான பொருள்கள் இந்த அகழாய்வில் கிடைக்கலாம் என்று கூறப்படும் நிலையில் ஏழாம் கட்ட ஆய்வை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்துவிடக் கூடாது என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.