விழுப்புரம்: பெற்ற தாயே தனது இரு குழந்தைகளையும் கடுமையாகத் தாக்கி, கொடூரமாக நடந்துகொண்டதை விவரிக்கும் காணொளிப் பதிவுகள் தமிழக மக்களை அதிர வைத்துள்ளது.
பச்சிளம் குழந்தையை ரத்தம் வரும் அளவுக்கு தாக்கிய அந்தப் பெண் நேற்று முன்தினம் ஆந்திராவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் வடிவழகன். 36 வயதான இவர் கூலித் தொழிலாளியாக உள்ளார்.
இவருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த 22 வயதான துளசிக்கும் (படம்) 2016ஆம் ஆண்டு திருமணமாகி, இரண்டு, நான்கு வயதான இரு ஆண் குழந்தைகள் உள்ளன.
இத்தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு மூண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு மனைவி துளசியை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார் வடிவழகன்.
இரு தினங்களுக்கு முன்னர், துளசி எடுத்துச் செல்ல மறந்த கைபேசி வடிவழகன் கண்ணில் பட்டது. அதை இயக்கிப் பார்த்தபோது, அதில் பதிவு செய்யப்பட்டிருந்த சில காணொளிகள் அவரை அதிர வைத்தன.
தனது இரு குழந்தைகளையும் துளசி அடித்து உதைக்கும் காட்சிகள் அதில் காணப்பட்டன. இரு வயதேயான பச்சிளம் குழந்தையின் வாயில் குத்துவது, எட்டி உதைப்பது என அவர் புரிந்த கொடுமைகளைத் தாங்க இயலாமல் இரு குழந்தைகளும் ரத்தக் காயங்களுடன் கதறி அழுவது காண்போரை பதறவும் கண்கலங்கவும் வைத்தன.
இந்தக் காணொளிப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அவரது நண்பர்களால் பகிரப்பட, வழக்குப்பதிவு செய்த போலிசார், துளசி ஆந்திராவில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றிருப்பதை அறிந்து, அங்கு சென்று கைது செய்தனர்.

